ரூ.7.54 கோடி செலவில் 62,46,412 கேக் துண்டுகள் கொள்முதல்... குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு வழங்க அரசாணை வெளியீடு!

 
கேக்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வரவிருக்கும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சுவையான கேக் வழங்கும் சிறப்புத் திட்டத்திற்குத் தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமான அரசாணையை வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாகப் பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது கொள்முதலுக்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள் தினச் சிறப்புக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்காக, ஆரம்பக்கட்டமாக ரூ. 9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் பொருட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 நிறுவனங்களிடம் இதற்கான கொள்முதல் பணி ஆணை அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

கேக்

இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த மொத்தக் கொள்முதலுக்கான மதிப்பு சுமார் ரூ. 7.54 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பள்ளிச் சிறார்கள் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுப் பொருட்களின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முழுமையாக உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கேக் துண்டும் சரியாக 45 கிராம் எடைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேக்

மேலும், கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் போது, அந்தப் பொருட்களின் மொத்தக் காலாவதி காலத்தில்  குறைந்தபட்சம் 30 நாட்களாவது மீதமிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு எத்தகைய குறையும் ஏற்படாதவாறு அரசு மிகத் துல்லியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கவுள்ள இந்த இனிப்பான பரிசால் மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் எழுந்துள்ளது.