400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து... தமிழகக் கூட்டுறவுத் துறை அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசின் 'நேஃபெட்' நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படவிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயத்திற்கான ஆணையைத் தமிழகக் கூட்டுறவுத் துறை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசின் நேஃபெட் நிறுவனத்திடம் கிலோ ரூ.29 வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யக் கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழகக் கூட்டுறவுத் துறை ஆணை வழங்கியிருந்தது.

இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்டு வந்த வெங்காயத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டபோது, அது மிகவும் தரமற்றதாகவும் பயன்பாட்டிற்கு ஏதுவற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 400 மெட்ரிக் டன் வெங்காயத்திற்கான கொள்முதல் ஆணையைத் தமிழகக் கூட்டுறவுத் துறை முழுமையாக ரத்து செய்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற வெங்காயம் குறித்த புகார்களுக்குப் பதிலளித்த அரசு, அந்த வெங்காயம் முழுவதும் நேஃபெட் நிறுவனத்திற்கே சொந்தமானது என்றும், கூட்டுறவுத் துறை அதனை அதிகாரப்பூர்வமாகப் பெறவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்களுக்குத் தரமான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகள் மற்றும் பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
