“புஷ்பா அரசா?... தோல்வியால் திமுக புகை கக்குகிறது!” - உதயநிதிக்கு விஜய் பதிலடி!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த 'புஷ்பா பட பாணி ஆட்சி' என்ற விமர்சனத்திற்கு, முதலமைச்சர் விஜய் மிகக் காட்டமான பதிலை அளித்துள்ளார். இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசுக்கும் அதிமுக-வின் ஒரு தரப்பிற்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். "புஷ்பா பட பாணியில் அதிமுக பிரமுகர் வீட்டுக்குச் சோபா செட் அனுப்பிவிட்டு, அதன் பின்னாலேயே முதலமைச்சரும் செல்கிறார். இது என்ன மாதிரியான அரசியல்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

உதயநிதியின் இந்த ஏளனப் பேச்சிற்கு முதலமைச்சர் விஜய் தனது பாணியில் பதிலளித்துள்ளார். "மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் இந்த மக்கள் அரசை, ஏளனமாக 'புஷ்பா அரசு' என்று திமுக விமர்சித்துள்ளது. தேர்தலில் மக்கள் தந்த படுதோல்வியால் என்ன செய்வது என்று தெரியாமல், திமுக இப்போது புகை கக்கிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் மக்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள்" என அவர் சாடினார்.

புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஒருவரை ஒருவர் 'ரீல்ஸ்' மற்றும் 'சினிமா பாணி' எனச் சாடிக்கொள்வது தமிழக அரசியலில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது.
