முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் புஷ்பவனம் குப்புசாமி - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராகப் பொறுப்பேற்பு!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல கிராமியக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குப்புசாமி, "கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இயல், இசை, நாடகம் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நலிந்த கலைஞர்களுக்குக் கரம் கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.
