புழல் ஏரியில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலி!
Oct 19, 2026, 18:15 IST
புழல் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அகில்ராம் (14), தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை நண்பர்களுடன் கள்ளிக்குப்பம் அருகே உள்ள புழல் ஏரிக்குச் சென்ற அவர்கள், குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கினர்.

இதைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, தகவல் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு இரு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
