புழல் சிறையில் பரபரப்பு... அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் (37) இன்று புழல் சிறையில் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவருக்குத் திடீரென வலிப்பு (Seizure) ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறை அதிகாரிகள் அவரை உடனடியாகச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், பிரியாணி கடை உரிமையாளரான ஞானசேகரனுக்கு 2025 ஜூன் மாதம் சென்னை மகிளா நீதிமன்றம் 30 ஆண்டுகள் எவ்வித சலுகையும் இன்றி சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஏற்கெனவே இவர் மீது 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணை கைதியாக இருந்தபோதும் இவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குத் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அதன் முக்கிய குற்றவாளிக்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பாதிப்பு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
