கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி காலமானார்.. நாளை இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அறிவிப்பு; பிரதமர் மோடி இரங்கல்!

 
கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி

கத்தார் நாட்டின் தற்போதைய ஆட்சியாளரின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அமீருமான மாண்புமிகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி தனது 74-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய அரசு நாளை ஒரு நாள் நாடு தழுவிய தேசிய துக்கத்தை அனுசரிக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கத்தார் முன்னாள் அமீரின் மறைவையொட்டி இந்திய அரசு எடுத்துள்ள துக்க நாசடங்கு விபரங்களை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாளை அனுசரிக்கப்படும் தேசிய துக்க நாளன்று, இந்தியா முழுவதும் வழக்கமாகத் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் மூவண்ணத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

தேசிய துக்க நாளான நாளை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த எந்தவிதமான கேளிக்கை மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் அமீரின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

ஃப்ட்

அதில், "கத்தார் நாட்டின் தந்தை அமீர், மாண்புமிகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானியின் மறைவால் நாங்கள் ஆழ்ந்த துயரம் அடைகிறோம். அவர் கத்தாரை பெரும் வளர்ச்சி மற்றும் நவீனச் செழிப்பின் உன்னத நிலைகளுக்கு வழிநடத்திய ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிறந்த தலைவர் ஆவார். கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நான் கத்தாருக்கு மேற்கொண்ட எனது பயணத்தின்போது, அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். இந்தியாவின் ஒரு உண்மையான நண்பராக அவரை நாங்கள் என்றென்றும் நினைவுகூர்கிறோம்."

வளைகுடா நாடான கத்தாரை 1995-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை சுமார் 18 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி. கடந்த 1995-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, இரத்தம் சிந்தாத அரண்மனைப் புரட்சியின் மூலம் தனது தந்தையைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவர் கத்தாரின் அமீராகப் பொறுப்பேற்றார். அவரது ஆட்சிக் காலத்தில் கத்தார் உலக அளவில் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க நாடாக உருவெடுத்தது.

கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், வளைகுடா நாடுகளின் அரசியல் வரலாற்றிலேயே மிக அரிய நிகழ்வாக, ஷேக் ஹமத் தானாக முன்வந்து தனது அமீர் பதவியிலிருந்து விலகினார். நாட்டின் எதிர்காலத் தலைமுறையைத் தயார்படுத்துவதற்கும், சுமூகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் தனது மகனான தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியிடம் அதிகாரத்தை ஒப்படைத்து, கத்தாரின் 'தந்தை அமீர்'  என்று போற்றப்பட்டார்.