தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது.

இன்று செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை தொடர்ச்சியாக 9 நாட்களுக்குப் பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்கள் முடிவடைந்து, மீண்டும் அக்டோபர் 5 அன்று பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் எந்தவிதத் தாமதமும் இன்றி வழங்குவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
