வெறிநாய் கடித்த பசுவின் பாலில் கோயில் பிரசாதம்... 450 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி!

 
பிரசாதம்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் துர்கா பூஜை திருவிழாவின் போது, வெறிநாய் கடித்த பசுவின் பாலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 450 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது பொதுமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே, அந்தப் பிரசாதத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பால், வெறிநாய் கடித்த பசுவிடம் இருந்து கறக்கப்பட்டது என்ற தகவல் தெரியவந்தது.

இத்தகவல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே கடும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சுகாதாரத்துறை சார்பில் உடனடியாகச் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, பிரசாதத்தைச் சாப்பிட்ட 450 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன.

பாலைக் நன்றாகக் காய்ச்சிய பிறகே பிரசாதம் தயாரிக்கப்பட்டதால், கொதிநிலையின் போது ரேபிஸ் வைரஸ் அழிந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.