மதுபானக் கடைக்குள் புகுந்து மது குடித்து மயங்கிய ரக்கூன்… வைரல் வீடியோ!
அமெரிக்காவில் மதுபானக் கடைக்குள் புகுந்து மது பாட்டில்களை உடைத்து, மது அருந்தியதால் மயங்கிக் கிடந்த ரக்கூன் விலங்கு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அந்த விலங்கின் வைரல் புகைப்படங்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நிதி திரட்டும் முயற்சியில், உள்ளூர் விலங்குகள் காப்பகத்துக்கு சுமார் ரூ.2.34 கோடி நிதி கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் ஆஷ்லேண்ட் நகரில் உள்ள அரசு மதுபானக் கடைக்குள் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி ரக்கூன் ஒன்று மேற்கூரை வழியாக நுழைந்தது. அங்கிருந்த மதுபான பாட்டில்களை உடைத்து, சுமார் 14 பாட்டில்களில் இருந்த மதுவைக் குடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கடையின் கழிவறை அருகே மயங்கிக் கிடந்த அந்த விலங்கை மறுநாள் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
தகவலறிந்து வந்த ஹனோவர் கவுண்டி விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் ரக்கூனை மீட்டு காப்பகத்துக்குக் கொண்டு சென்றனர். சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு எந்தக் காயமும் இன்றி அது மீண்டும் காட்டில் விடப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, 'டிராஷ்டு பாண்டா' (Trashed Panda) என்ற பெயரில் நிதி திரட்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த நிதி, விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான உடல் கேமராக்கள், விலங்குகளுக்கான தங்குமிடங்கள், உணவு சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
