தீராத ஆத்திரம்... காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு லாரி முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!
ஓசூர் அருகே காதலியை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு, வாலிபர் ஒருவர் சாலையில் வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ராமனூரைச் சேர்ந்தவர் திவிஜாஸ்ரீ (21). இவர் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணியரசன் மகன் பிரதீப் (25) என்பவரும் பாகலூர் அருகே உள்ள ஜீமங்கலத்தில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், நேற்று இரவில் திவிஜாஸ்ரீயைப் பிரதீப் தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பிரதீப், அறையில் இருந்த அரிவாளை எடுத்து திவிஜாஸ்ரீயைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த திவிஜாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காதலி பலியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதீப், "ஐயோ! காதலியை கொன்று விட்டேனே..." எனக் கதறியபடி அறையை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர் ஓசூர் - பாகலூர் சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் முன் திடீரெனப் பாய்ந்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்குக் போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பிரதீப்பும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பாகலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திவிஜாஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த காதலர்களுக்கு இடையே எதற்காகத் தகராறு ஏற்பட்டது என்பது குறித்து அவர்களது நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
