ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு புதிய பெருமை… டாப் 10-ல் இடம்பிடித்த ரஹ்மத் ஷா!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஹ்மத் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 7-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் பேட்டிங் அல்லது பந்துவீச்சு தரவரிசையின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரஹ்மத் ஷா 173 ரன்கள் குவித்தார். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த 5-வது சதமாகும். இந்த ஆண்டில் அவர் பதிவு செய்த 2-வது சதமும் இதுவாகும்.
இந்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்திய கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களையும் அவர் முந்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி அணிகள் தரவரிசையிலும் 6-வது இடத்தைப் பிடித்து தனது சிறந்த நிலையை எட்டியது. இந்நிலையில், ரஹ்மத் ஷாவின் சாதனை அந்த அணியின் சர்வதேச கிரிக்கெட் வளர்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
