இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி... 3 தொகுதிகளில் பிரச்சாரம்... ஸ்டாலினுடன் சந்திப்பு கிடையாது!

 
ராகுல் செல்வப்பெருந்தகை ராகுல் செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருச்சி என மூன்று மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார்.

ராகுல் காந்தியின் இன்றைய பயணத் திட்ட விவரங்களின்படி, இன்று காலை 8:30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார். காலை 11:10 மணி சென்னை பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். காலை 11:30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி தொகுதிக்குச் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துத் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

ராகுல்

மதியம் 1:30 மணி: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குச் சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

மாலை 3:00 மணி: சோளிங்கரில் இருந்து மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் திரும்புகிறார்.

மாலை 3:30 மணி: சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குப் பயணம் செய்கிறார்.

மாலை 4:15 மணி: திருச்சி விமான நிலையம் சென்றடையும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக துறையூர் தொகுதிக்குச் செல்கிறார். அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

ராகுல் காந்தி

மாலை 5:40 மணி: திருச்சி விமான நிலையத்திலிருந்து மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறார். இரவு 8:20 மணி: டெல்லி விமான நிலையத்தைச் சென்றடைந்து தனது ஒருநாள் பயணத்தை நிறைவு செய்கிறார்.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் 'எஸ்பிஜி' மற்றும் தமிழகக் காவல்துறையினர் இணைந்து ஐந்தடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தின் போது, அவர் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மதுரையில் திட்டமிடப்பட்டு வருவதால் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.