தடியடியில் காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்த ராகுல் காந்தி!
டெல்லியில் நீட் முறைகேட்டிற்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் காயமடைந்த இளைஞர்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். புதுடெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்களைச் சந்தித்த அவர், அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்ற ராகுல் காந்தி, சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் உரையாடினார்: காயமடைந்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்துத் தளத்தில் இருந்த மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறை இத்தகைய கொடூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெல்லி போராட்ட களத்தில் 178 பேர் காயமடைந்துள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்துள்ளது போராட்டக்காரர்களிடையே பெரும் ஆறுதலையும், தேசிய அரசியலில் மேலும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
