ராகுல் காந்தி, பிரியங்கா கைது.. ராகுல் காந்திக்கு காயம், மூக்கில் ரத்தகசிவு!

 
ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

டெல்லியில் போராட்டத்தின் போது க காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ராகுல் காந்தி, அதனைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் களமிறங்கினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் மற்றும் எம்பிக்கள், இளைஞர் அமைப்பினருடன் இணைந்து ராஜாஜி மார்க்கில் இருந்து லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கிப் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

ராகுல் காந்தி

பிரதமர் இல்லத்தின் முன்பாகச் சாலையில் அமர்ந்து தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இதற்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய இணை அமைச்சர் மற்றும் டெல்லி காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, காவல்துறையினர் பலவந்தமாகக் கைது நடவடிக்கையில் இறங்கினர். தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்டோரைப் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

ராகுல் காந்தி

காவல்துறையினரின் இந்த கைது நடவடிக்கையின் போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டானது. மேலும் பல காங்கிரஸ் எம்பிக்களுக்கும் காயம் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.