வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி... ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம்!

 
ராகுல் காந்தி ராகுல் காந்தி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருவாரா மாட்டாரா என்ற விவாதங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க ஆசைப்பட்டதாகவும், திமுக-வுடன் கூட்டணி தொடர்வதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் பரவிய வதந்திகளைத் தவிடு பொடியாக்கி, அவரது பயணத்திட்டம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஸ்டாலின் ராகுல் காந்தி

காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளபடி, ராகுல் காந்தி நாளை மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளார்.

நாளை பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 20ம் தேதி தென் தமிழகத்தில் நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் குளச்சல் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

ராகுல்காந்தி ராகுல்

இந்தச் சுற்றுப்பயணத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, நாங்குநேரி தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றிப் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை இருவரும் இணைந்து மேடை ஏறாத நிலையில், இந்தச் சந்திப்பு கூட்டணித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் என எதிர்க்கட்சிகள் கிளப்பிவிட்ட புகார்களுக்கு, ராகுல் காந்தியின் இந்த வருகை பதிலடி கொடுக்கும் வகையில் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.