ராகுல் காந்தி இன்று சென்னை வருகை - முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசுகிறார்!
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, 'மாணவர்களின் குரல்' நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று சென்னைக்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் போது அவர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசவுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் ராகுல் காந்தி, மதியம் 1.30 மணியளவில் நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து மதிய விருந்தில் பங்கேற்கிறார். தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், சமீபத்திய இடைத்தேர்தல் வெற்றிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இன்று மாலை 5 மணியளவில் சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
கல்வி முறை முறைகேடுகள், நீட் தேர்வுகள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக கியூ.ஆர். கோடு மூலம் முன்பதிவு செய்த மாணவர்களில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் மாணவர்கள் பிரத்யேக அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், நிகழ்வை வெளியிலிருந்து பார்க்க அகண்ட திரைகளும், உரிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுடன் உரையாடும் நிகழ்வுக்கு முன்னதாக, தாஜ் கன்னிமாரா ஓட்டலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசும் ராகுல் காந்தி, இரவு 9.30 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
