இன்று கேரளாவில் ராகுல்காந்தி ரோடு ஷோ... மருத்துவமனையில் சோனியாகாந்தி... தொண்டர்கள் பதற்றம்!
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இன்று ராகுல்காந்தி பிரச்சாரத்தை தொடங்க இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல்காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்து இன்று பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அதற்கான ஏற்பாடுகளை கேரள காங்கிரஸார் செய்து வந்தனர்.
கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கியத் தொகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இன்று மாலை கோழிக்கோடு கடற்கரை பகுதியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இதில் தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸின் 5 முக்கிய 'வாக்குறுதிகள்':
கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் போலவே, கேரளாவிலும் 5 முக்கிய நலத்திட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. அவற்றை ராகுல் காந்தி இந்தப் பிரசாரத்தின் போது விரிவாக விளக்கவுள்ளார்:
-
கேரள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம்.
-
கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 நிதி உதவி.
-
சமூக நல ஓய்வூதியத் தொகை ₹3,000 ஆக உயர்வு.
-
ஒரு குடும்பத்திற்கு ₹25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு.
-
இளம் தொழில்முனைவோருக்கு ₹5 லட்சம் வரை வட்டியற்ற கடன் வசதி ஆகிய காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் கேரளாவில் கவனம் பெற்றுள்ளது.
