நாளை ராகுல் காந்தி சென்னை வருகை... அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் !
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்படும் அவர், காலை 11.10 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்தைச் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி தொகுதிக்குச் சென்று, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துத் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பிப் பின்னர் தனி விமானத்தில் திருச்சிக்குப் பயணம் செய்கிறார். திருச்சியில் உள்ள துறையூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காக அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். மாலை 5.40 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு அவர் மீண்டும் டெல்லி சென்றடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும், வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தின் போது, அவர் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கும் திட்டமிடப்பட்டு வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
