ராகுல் - ஸ்டாலின் மேடை பகிர்வு இல்லையா? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நட்சத்திரப் பேச்சாளரான ராகுல் காந்தி, நாளை (ஏப்ரல் 18) தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், இந்தப் பயணத்தின் போது அவரும் முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரப் பயணங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. அவர் இன்னும் 40-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு சேகரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 21ம் தேதி தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அவர் பிரசாரம் செய்கிறார்."
"ராகுல் காந்தி ஒரு பக்கமும், திமுக தலைவர்கள் ஒரு பக்கமும் கூட்டணிக் கட்சிகளுக்காகத் தனித்தனியாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்தி நாளை பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். அந்தந்த பகுதிகளில் திமுக நிர்வாகிகள் அவரது கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆனால், முதல்வரின் பயணத் திட்டத்தை இப்போது மாற்றியமைக்க இயலாது."

ஏற்கனவே புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே நாளில் அங்கு இருந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 'அதிகாரப் பகிர்வு' தொடர்பாகச் சில சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், தற்போதும் அவர்கள் மேடையைப் பகிர்ந்து கொள்ளாதது எதிர்க்கட்சிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
