புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி விற்பனை செய்ததாகப் புகார்: மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் கைது
ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் மற்றும் எலும்புக்கூடுகளைச் சட்டவிரோதமாகத் தோண்டி விற்பனை செய்வதாக எழுந்த புகாரில், தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டவுன் மந்த்ராயலா சாலையில் உள்ள இந்து மக்களுக்கான சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்கள், எலும்புக்கூடுகள் மற்றும் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக இவை பயன்படுத்தப்பட்டதாகவும், குறைந்த தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, போலீசாரும் அரசு அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு உடல்களைத் தோண்டி வாங்கியதாகக் கூறப்படும் தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் ராஜு, அப்சர் ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து நேதாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
