எ.வ.வேலு வீட்டில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
எ.வ.வேலு

கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய 13 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குத் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தற்பொழுது தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

எ.வ.வேலுவுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்தச் சோதனையை முழுமையாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பதிவில் "அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தற்போதைய தவெக அரசு இந்தச் சோதனையை ஏவிவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் நடந்ததாக இதற்கு முன்பு இதுவரை தொடரப்பட்ட எந்தவொரு வழக்கிலும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே கடந்த கால வரலாறு ஆகும்."

எ.வ.வேலு

தொடர்ந்து தவெக அரசின் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்குத் திமுக ஒருபோதும் பணியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆளும்கட்சியினரின் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரைடு போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிடும் சாதாரண இயக்கம் அல்ல திமுக.

இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையும், எத்தனையோ சோதனைகளையும், பழிவாங்கும் அரசியலையும் வரலாற்றில் நேரடியாகப் பார்த்தவர்கள் நாங்கள் என்று மு.க.ஸ்டாலின் தவெக அரசை நோக்கிக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.