தமிழகத்தில் 60 இடங்களில் ரெய்டு.. ஏராளமான டிஜிட்டல் ஆதாரங்கள், போலி நிறுவன ஆவணங்கள் சிக்கியது!

 
ரெய்டு லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 60 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், பல்வேறு முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கடத்திகள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் லஞ்ச புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, போலி நிறுவனங்களைக் காகித அளவில் உருவாக்கி, அவற்றின் மூலம் முறைகேடாக டெண்டர்களைப் பெற்று கோடிக்கணக்கில் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

சோதனையின் முடிவில் டெண்டர் தொடர்பான முக்கியக் கோப்புகள், கணிப்பொறி மற்றும் ஹார்டு டிஸ்க் போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள், போலி நிறுவனங்களின் பெயரில் உள்ள வங்கி மற்றும் நிறுவன ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.