சிக்னலுக்காக இனி காத்திருக்கத் தேவையில்ல... அனைத்து இரயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் அதிநவீன வசதி!

 
திருநெல்வேலி

மதுரை கோட்ட இரயில்வேக்கு உட்பட்ட நெல்லை இரயில் நிலையத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தண்டவாள சீரமைப்புப் பணிகளால் அனைத்து இரயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வாஞ்சி மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரையிலான இரட்டை அகலப்பாதை பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நெல்லை இரயில் நிலைய இணைப்புப் பணிகள் முடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை இரயில் நிலையத்திற்குள் வரும் இரயில்களின் வேகம் மணிக்கு 15 கி.மீ. என்ற அளவிலிருந்து 60 கி.மீ. ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் செல்லும் இரயில்களை மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் இயக்கும் வகையில் தண்டவாள உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி

இரயில் நிலைய நடைமேடைகளின் நீளம் அதிகரிக்கப்பட்டுக்கூடுதலாக 600 மீட்டர் நீளத்திற்கு புதிய இணை இரயில்வே தண்டவாளமும் அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இரு வெவ்வேறு பாதைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் நெல்லை இரயில் நிலையத்திற்குள் இரயில்கள் வந்து செல்லும் தொழில்நட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவிலில் இருந்து வந்து செல்லும் இரயில்களின் போக்குவரத்தில் எவ்விதத் தடங்கலும் இன்றிச் சீரான இரயில் இயக்கம் சாத்தியமாகியுள்ளது. நெல்லை மற்றும் மேலப்பாளையம் இடையே அமைந்த இரயில்வே கேட் பகுதி நவீன சிக்னல் அமைப்புடன் இணைக்கப்பட்டுத் தானியங்கி கேட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

train

இந்தப் பிரம்மாண்ட மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக நெல்லையைச் சுற்றியுள்ள இரயில் பாதைகளில் சுமார் 108 புதிய சிக்னல்கள் புதிதாகப் நிறுவப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு திசையிலிருந்தும் நெல்லை இரயில் நிலையத்திற்குள் இரயில்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் சிக்னலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர விரயத்தைத் தடுத்து இரயில்கள் தங்கு தடையின்றி இயங்க வழிவகுக்கும் இந்த புதிய கட்டமைப்புப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென் மாவட்ட இரயில் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சீரமைப்புப் பணி இரயில்வே துறையின் முக்கியச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.