ரயில்வே கேட்டை கடக்க முயன்றால் லைசென்ஸ் கட்... மோட்டார் வாகனத் துறை அதிரடி!
கேரளாவில் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் எச்சரிக்கை சமிக்ஞைகள் இயக்கப்பட்ட பிறகோ அல்லது கேட் மூடப்படும்போதோ அதனை மீறிக் கடக்க முயற்சிக்கும் வாகன ஓட்டிகள் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமத்தை உடனடியாக இடைநீக்கம் செய்ய மாநில மோட்டார் வாகனத் துறை உத்தரவிட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயலால் உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க இந்த அதிரடி அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே அளிக்கும் புகார்களின் அடிப்படையில் அந்தந்தப் பகுதி மண்டலப் போக்குவரத்து அலுவலகங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன. எச்சரிக்கை விளக்குகளைப் பொருட்படுத்தாமல் அவசரமாகத் தண்டவாளத்தைக் கடக்க முயன்று மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்கள் மீது காவல்துறையினரும் இனி வழக்குப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு விதிகளைக் காற்றில் பறக்கவிடும் வாகன ஓட்டிகளைக் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டனை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ரயில்வே கிராசிங்குகளில் நிலவும் ஆபத்தான பயணங்களைத் தவிர்ப்பதும், அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை முழுமையாகக் குறைப்பதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருமுறை விதிமீறலில் ஈடுபட்டாலே ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும் என்பதால் கேரளா முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
