ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு ரயில்வே கடிதம்!

 
டாஸ்மாக்  ரயில்வே டாஸ்மாக்  ரயில்வே

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அங்கு செயல்பட்டு வரும் 52 டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக அகற்றக் கோரி, தமிழக அரசுக்கு ரயில்வே பாதுகாப்பு படை கடிதம் அனுப்பியுள்ளது.

ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலேயே மதுக்கடைகள் அமைந்திருப்பதால், மதுப்பிரியர்களால் பொதுமக்களுக்கும், குறிப்பாகப் பெண் பயணிகளுக்கும் அன்றாடம் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

ரயில்வே பாதுகாப்பு படை அனுப்பியுள்ள அந்தப் பரிந்துரைக் கடிதத்தில், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட புறநகர் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பெரம்பூர், அரக்கோணம், மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களின் மிக அருகிலேயே தலா 2 முதல் 3 டாஸ்மாக் கடைகள் வீதம் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வியாசர்பாடி, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவாயில் பகுதிகளிலேயே தலா ஒரு கடை வீதம் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இந்த மதுக்கடைகளுக்கு வந்து செல்லும் மதுப்பிரியர்கள், மது அருந்திவிட்டு ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள் மற்றும் பொதுப்பாதைகளில் அமர்ந்து கொண்டு பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

எனவே, ரயில் பயணிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பட்டியலிடப்பட்டுள்ள இந்த 52 டாஸ்மாக் கடைகளையும் மாற்று இடங்களுக்கு இடமாற்றம் செய்யவோ அல்லது நிரந்தரமாக மூடவோ புதிய தவெக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மிகக் கடுமையான தொனியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.