சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Updated: Sep 10, 2026, 14:48 IST
தெற்கு உள்கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாகக் காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவி வருவதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 10) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

