குடை எடுத்துட்டு போங்க! 14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்து குளிர்வித்தது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாளும் இதே நிலை நீடிக்கும் என்று கூறியுள்ள வானிலை மையம், தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. இதனால் கோடை வெப்பத்தில் தவித்து வரும் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நேற்று சென்னை விமான நிலையப் பகுதியில் 105 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் சற்று நீடிக்கவே செய்யும்.
