தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!

 
school rain school rain

தமிழகத்தில் கோடைக் கால வெயிலின் தாக்கம் பரவலாகக் காணப்பட்டாலும், வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை விமான நிலையப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலையாக 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.