தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை... நாடு முழுவதும் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்!

 
மஞ்சள்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கும் நிலையில், புனே அருகே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் 3 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் இருந்து ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன.

தலைநகர் டெல்லியில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 72.6 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காசியாபாத் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரமாகப் பெய்த இடைவிடாத மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் டேராடூனில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென்னிந்தியப் பகுதியான கேரளாவிலும் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால்  எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்குப் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி-நொய்டா விரைவுச்சாலையில் மழைநீரால் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாகப் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.