சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6ம் தேதி தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 7ம் தேதி நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
