சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா, இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைக்காலம் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
