வீடு புகுந்து ரூ50000/- ரொக்கம், நகை திருடிய பெண் போலீஸ் ஏட்டு!

 
ஏட்டு

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பூட்டியிருந்த வீட்டில் நகை மற்றும் பணம் திருடப்பட்ட வழக்கில், அந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (50). பூ வியாபாரியான இவர், கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருடுபோனது.

திருட்டு

இதுகுறித்து சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு பெண் சங்கரலிங்கத்தின் வீட்டுக்குள் சென்று நகை மற்றும் பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சங்கரலிங்கத்தின் உறவினரும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவருமான பாக்கியலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது.

பாக்கியலட்சுமி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பணி இடை நீக்கம்

இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், பாக்கியலட்சுமியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். விசாரணை பாதிக்காமல் இருப்பதற்காகவும், சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் திருட்டு சம்பவத்திற்கான முழுமையான பின்னணி, நகை மற்றும் பணம் மீட்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விவரங்கள் போலீசாரின் தொடர் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். தற்போது பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.