64 சொகுசு வில்லாக்கள், காட்டேஜ்கள் வாங்கிய ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். தம்பதி: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!
ராஜஸ்தானில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிகர் அகர்வால் மற்றும் அவரது ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி பிரஷாகா மாத்தூர் ஆகியோரின் குடும்பத்தினர், தனியார் ரிசார்ட் நிறுவனத்திடமிருந்து 64 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவான விலைக்கு இந்தச் சொத்துகள் வாங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
2 ஆண்டுகளில் 64 சொத்துகள் வாங்கிய குடும்பம்
ராஜஸ்தானில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷாகா மாத்தூர் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், 'கோயல் பேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் 'அனந்தா' ரிசார்ட்டுகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 64 சொத்துகளை வாங்கியுள்ளனர்.
இதில், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் உதய்பூரில் 20 காட்டேஜ்களும், 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் அல்வாரில் 20 காட்டேஜ்களும், கடந்த அக்டோபரில் ஜெய்ப்பூரில் 24 வில்லாக்களும் வாங்கப்பட்டுள்ளன.
ரூ.59 லட்சம் வில்லா ரூ.11 லட்சத்துக்கு வாங்கப்பட்டதா?
இந்தச் சொத்துகள் சந்தை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் ரூ.59 லட்சம் என விளம்பரப்படுத்தப்பட்ட வில்லாக்கள், தலா ரூ.11 லட்சத்துக்கு வாங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்துகள் பதிவு செய்யப்பட்ட அதே நாளில் அவை மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரிசார்ட் நிறுவனம் தொடர்ந்து அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்தி, வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்
கடந்த 2006 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் ஷிகர் அகர்வால் தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட ரிசார்ட் நிறுவனத்துக்கு அரசு சலுகைகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொடுத்தாரா என்றும், அதற்குப் பிரதிபலனாக அவரது குடும்பத்தினர் குறைந்த விலையில் சொத்துகளைப் பெற்றார்களா என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக ஷிகர் அகர்வால் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களான முகுந்த் சரண் கோயல், சஞ்சய் கோயல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு
தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி ஷிகர் அகர்வால் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையைத் தடுத்து நிறுத்தவோ, அவருக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கவோ மறுத்துவிட்டது.
மேலும், மனு தொடர்பாகப் பதிலளிக்க மாநில அரசுக்கு 3 வாரங்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரம் ராஜஸ்தானில் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
