ராஜஸ்தானில் கோர விபத்து! பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் கட்பிராலி கிராமத்தைச் சேர்ந்த 23 பேர், நான்கு நாள் ஆன்மிக சுற்றுலாவாக ராஜஸ்தான் சென்றனர். அங்குள்ள சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள காது ஷியாம் கோவிலுக்குச் செல்வதற்காக இன்று அதிகாலை வேனில் பயணம் செய்தனர்.
அப்போது கோட்டா மாவட்டத்தில் டெல்லி–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சிம்லியா கிராமம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
