மாணவிகளுடன் குளித்த அரசு பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்!

 
ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவிகளுடன் அணையில் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அரசுப் பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி முதல்வர் லால் சந்த் மீனா. இவர் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர், மாணவிகளை அருகில் உள்ள அணைப் பகுதிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் பள்ளி முதல்வர் லால் சந்த் மீனா அணையில் குளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஒருவர் மாணவிகளுடன் இவ்வாறு நடந்துகொண்டது பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதையடுத்து அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, அவரைப் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக லால் சந்த் மீனா மீது துறை ரீதியான விசாரணையும் முடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதுடன், தவறான முன்னுதாரணமாக நடந்துகொண்ட தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.