"திமுக - அதிமுக கூட்டணிக்கு ராஜேந்திர பாலாஜி தான் ஒருங்கிணைப்பாளர்" - அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்!

 
ராஜேந்திர பாலாஜி நிர்மல்குமார்

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து தவெக அமைச்சர் நிர்மல்குமார் செய்துள்ள விமர்சனம் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர் நிர்மல்குமார், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில் அதிமுகவினரைக் கடுமையாகச் சாடினார். "அதிமுகவினர் என்ன பேசுவது என்றே தெரியாமல் குழப்பத்தில் பேசுகிறார்கள். தற்போதைய சூழலில் திமுக - அதிமுக கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதான் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் போலிருக்கிறது" என நக்கலாக விமர்சித்தார்.

தவெக ஆட்சியைத் தொடக்கத்திலிருந்தே கவிழ்க்க வேண்டும் என்றுதான் திமுக முயன்று வருகிறது. இப்போதும் அதற்கான வேலைகளையே செய்கிறார்கள்.  எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதான், தவெக அல்ல. ஆனால், பழி மட்டும் எங்கள் மீது போடப் பார்க்கிறார்கள் என்றார்.

இந்தச் செய்தி சந்திப்பின் போது வழக்கத்திற்கு மாறாக, அரசுத் துறை அதிகாரிகளைத் தனது இருக்கைக்கு அருகிலேயே அமர வைத்துக் கொண்டு அமைச்சர் நிர்மல்குமார் இந்த அரசியல் ரீதியிலான காரசாரமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். அரசு அதிகாரிகளின் முன்னிலையிலேயே அவர் எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.