"அப்போ புரியல, இப்போ புரியுது"... ரஜினி ஸ்டாலின் சந்திப்பு குறித்து கஸ்தூரியின் அதிரடி பதிவு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறி வரும் நிலையில், நடிகை கஸ்தூரியின் சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அசாதாரணமான அரசியல் சூழல் மற்றும் ரஜினிகாந்த் முன்னதாக வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். "அப்போ புரியல, இப்போ புரியுது" என அவர் பதிவிட்டுள்ள வாசகம், ரஜினியின் அரசியல் முடிவுகளுக்குப் பின்னால் இருந்த மர்மங்களை உடைப்பதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, திமுகவின் மிரட்டலால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனத் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மார்ச் 17-ம் தேதி அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், "காலம் பேசாது; ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" எனப் புதிராகக் குறிப்பிட்டிருந்தார். தற்போதையத் தேர்தல் முடிவுகள் மற்றும் திமுக-அதிமுக இடையே நிலவுவதாகக் கூறப்படும் மறைமுக உடன்பாடுகள் ஆகியவை ரஜினியின் அந்த வார்த்தைகளுக்கான உண்மையான விளக்கத்தைத் தந்துள்ளதாகக் கஸ்தூரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்றைக் கைவிட வேண்டியிருக்கும் நிலையில், தவெக-வின் பலம் 106-ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய நெருக்கடியான நேரத்தில், ரஜினி முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதாகவும், தனது ஆதரவு எப்போதும் இருக்கும் எனக் கூறியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியின் தீர்க்கதரிசனமான முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் மாற்றங்களை முன்வைத்து கஸ்தூரி பதிவிட்டுள்ள இந்த டுவிட், ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
