ரஜினியின் ஸ்ரீராகவேந்திரா மண்டபம் இடிப்பு - சொகுசு ஹோட்டலாக கட்டப்பட உள்ளதாகத் தகவல்!

 
ரஜினி ஸ்ரீராகவேந்திரா மண்டபம்

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்குச் சொந்தமான புகழ்பெற்ற ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்று கட்டப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1990-களில் கட்டப்பட்ட இந்த மண்டபம், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கும் இடமாகவும், முக்கிய ஆலோசனைகளை வழங்கும் மையமாகவும் விளங்கியது. குறிப்பாக, இதே மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக முதன்முதலில் அறிவித்துத் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

செளந்தர்யா ரஜினி

தற்போது இந்த மண்டபம் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றை எழுப்பும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஜினிகாந்தின் நினைவுகள் நிறைந்த இந்த மண்டபம் இடிக்கப்படுவது குறித்த தகவல் அவரது ரசிகர்களிடையே ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குப் புதிய கட்டுமானம் எழும்பவுள்ளது குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் திட்டத்தை ரஜினிகாந்தே நேரடியாத் முன்னெடுத்துக் கட்டுகிறாரா அல்லது வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.