அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவு..? விரைவில் தனிக்கட்சி அறிவிப்பு!
அண்மையில் நிறைவடைந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகப் பாஜகவின் முக்கிய முகமாக விளங்கிய கே. அண்ணாமலை, தற்பொழுது அக்கட்சியில் இருந்து விலகிப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை மூலம் அண்ணாமலை என்ற பிராண்ட் தீவிரமாக முன்னிறுத்தப்பட்டது. எனினும், சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, அவருக்கும் கட்சியின் தேசியத் தலைமைக்கும் இடையே சில அதிருப்திகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்இ நிர்வாகம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதற்குத் தனது சொந்தக் கட்சியின் கொள்கை வரிசையிலிருந்து விலகி, அண்ணாமலை பகிரங்கமாக சமூக வலைதளத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் குறுகிய காலத்தில் புதிய மொழியைக் கற்கக் கட்டாயப்படுத்துவது அவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும்" எனக் கூறி அண்ணாமலை வெளியிட்ட இந்த அறிக்கை, அவர் பாஜகவை விட்டு விலகப் போகிறார் என்பதற்கான முதன்மை அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
