3 நாள் பயணமாக ஜெர்மனி செல்கிறார் ராஜ்நாத் சிங்!

 
ராஜ்நாத்சிங் ராஜ்நாத்சிங்

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நாளை (ஏப்ரல் 21) முதல் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி செல்கிறார். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் ஜெர்மனி செல்வது இதுவே முதல் முறை என்பதால், இந்தப் பயணம் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Rajnath singh

பெர்லினில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், ஜெர்மானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 'பாதுகாப்புத் தொழில்சார் வரைபடத் திட்டம்' (Bilateral Defence Industrial Roadmap) இறுதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ராணுவத் தளவாடங்களின் கூட்டுத் தயாரிப்பு, புதிய தொழில்நுட்பங்களின் பகிர்வு மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஜெர்மனி நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Rajnath singh

குறிப்பாக, இணையப் பாதுகாப்பு (Cyber Security), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் (Drones) போன்ற நவீனத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், ஐ.நா. அமைதி காக்கும் படைகளுக்கான பயிற்சி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையொப்பமாக வாய்ப்புள்ளது. ஜெர்மனியின் முன்னணி பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசும் ராஜ்நாத் சிங், இந்தியாவை ஒரு சர்வதேச பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை எடுத்துரைப்பார்.