ராஜ்யசபா தேர்தல்.. தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு - டெல்லிக்குச் செல்லும் அதிரடிப் பட்டாளம்!

 
ராஜ்யசபா ராஜ்யசபா

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்திலிருந்து காலியாகும் 6 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் களம், இன்று ஒரு முக்கிய முடிவுக்கு வந்துள்ளது. மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தற்போது 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் இதற்கான அறிவிப்பைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி வெளியிட்டார்.

தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் தலா 3 பேர் வீதம் 6 பேர் களம் கண்டனர்.

அன்புமணி

அதிமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக தம்பிதுரை (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக) மற்றும் திமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்) என 6 பேர் போட்டியிட்டிருந்தனர்.

இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், பிரதான கட்சிகளைச் சேர்ந்த மேற்கண்ட 6 பேரின் மனுக்கள் மட்டுமே முறைப்படி இருந்தன. மற்ற 6 பேரின் மனுக்கள் தகுதியற்றவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியில் இல்லாததால் இவர்கள் 6 பேரும் "போட்டியின்றித் தேர்வு" செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், தம்பிதுரை, சுதீஷ் மற்றும் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் நேரில் வந்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

ராஜ்யசபா

தமிழகத்தின் குரலைத் தேசிய அளவில் ஒலிக்கச் செய்யப் போகும் இந்தப் புதிய மற்றும் மூத்த உறுப்பினர்களின் வருகை, டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாகத் தேமுதிக சார்பில் சுதீஷ் மற்றும் திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போன்றோரின் வருகை மாநிலங்களவையில் புதிய விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய தேர்தல் ஜுரம் ஒரு பக்கம் இருக்க, மாநிலங்களவைக்கான இந்த அமைதியான வெற்றி அரசியல் கட்சிகளுக்கு ஒரு நிம்மதியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.