ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான முயற்சியில் லதா ரஜினிகாந்த்? - டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு!

 
லதா ரஜினிகாந்த்

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருபவருமான லதா ரஜினிகாந்த், ராஜ்யசபா நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வி மற்றும் சமூகப் சேவைத் துறைகளில் தான் செய்து வரும் பல்வேறு தொண்டு பணிகளின் அடிப்படையில், கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைப் பிரிவின் கீழ் வழங்கப்படும் ராஜ்யசபா நியமன எம்.பி. பதவியை அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

லதா ரஜினிகாந்த்

இதற்காகப் புதுடெல்லி சென்றுள்ள அவர், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இந்த எம்.பி. பதவியில் ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா போன்ற பிரபலங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், லதா ரஜினிகாந்தின் இந்த டெல்லி பயணம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.