ராம நவமி ஸ்பெஷல்: ராமபிரானுக்கு உகந்த 'கோசம்பரி' செய்வது எப்படி? ஈஸியான ரெசிப்பி.. அடுப்பில்லாத சமையல்!

 
ராம நவமி  கோசம்பரி ராம நவமி  கோசம்பரி

ஸ்ரீராம நவமி திருநாளான இன்று, ராமபிரானுக்கு மிகவும் உகந்த, ஆரோக்கியம் நிறைந்த 'கோசம்பரி' பிரசாதத்தை அடுப்பில்லாமல் எளிமையாகச் செய்யும் முறையை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

ஸ்ரீராம நவமி வழிபாட்டில் பானகம், நீர் மோர் வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது 'கோசம்பரி'. பாசிப்பருப்பு மற்றும் காய்கறிகள் கலந்து செய்யப்படும் இந்தப் பிரசாதம் உடலுக்குக் குளிர்ச்சியையும், ராமபிரானின் அருளையும் பெற்றுத் தரும்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

வெள்ளரிக்காய் (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்

மாங்காய் (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்

தேங்காய் (பல் பல்லாக நறுக்கியது) - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1 (மிகவும் பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு

எலுமிச்சை பழம் - அரை மூடி

உப்பு - தேவையான அளவு

ராம நவமி

செய்முறை விளக்கம்:

முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பருப்பு ஊறுவதற்குள் வெள்ளரிக்காய், மாங்காய் மற்றும் தேங்காயை ஒரே அளவிலான சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (நறுக்க சிரமமாக இருந்தால் துருவியும் சேர்த்துக் கொள்ளலாம்). பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும்.

அரை மணி நேரம் கழித்து, ஊறிய பாசிப்பருப்பில் உள்ள தண்ணீரை முற்றிலுமாக வடித்துவிட வேண்டும். தண்ணீர் சிறிதும் இல்லாமல் இருப்பது கோசம்பரி சுவையாக அமைய உதவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வடித்த பாசிப்பருப்பைச் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய், மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, அதன் மேல் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விடவும். இப்போது அனைத்தையும் ஒன்றாக நன்றாகக் கிளறினால் சுவையான, சத்தான கோசம்பரி தயார்.

அயோத்தி பாலராமர்

ராம நவமி அன்று இந்த கோசம்பரியுடன் பானகம், நீர் மோர் மற்றும் துளசி தீர்த்தம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைப்பது மிகவும் சிறப்பு. அடுப்பில் வைத்துச் சமைக்காமல் இந்தப் பொருட்களைத் தயார் செய்து இறைவனுக்குப் படைப்பது பழங்காலந்தொட்டே கடைப்பிடிக்கப்படும் ஒரு ஐதீகமாகும்.

இதில் புரதச்சத்து (பருப்பு) மற்றும் நீர்ச்சத்து (வெள்ளரிக்காய்) நிறைந்துள்ளதால் கோடை காலத்திற்கு மிகச் சிறந்த உணவாகும். இந்தப் பிரசாதத்தை வீட்டிற்கு வருபவர்களுக்கும், அருகில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கும் விநியோகம் செய்வது அதிகப் புண்ணியத்தைத் தரும்.