திமுக கூட்டணியில் ராமதாஸ்... விசிக எந்த நெருக்கடியும் தரவில்லை - திருமாவளவன் விளக்கம்!
திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், திமுக கூட்டணியில் பாமக இணையாமல் போனதற்கு விசிகதான் காரணம் என்ற விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
"திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமக சேர்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது தவறான கருத்து. திமுகவுக்கு விசிக எந்த விதமான நெருக்கடியையும் கொடுக்கவில்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். பாமகவைத் தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திமுக விரும்பினால், அவர்கள் அந்த முடிவைத் துணிச்சலாக எடுப்பார்கள் என்றும், அதில் விசிகவின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதால், அவர்களுடன் ஒரே மேடையில் பயணிக்கப் போவதில்லை என்பதில் விசிக உறுதியாக இருக்கிறது. திமுக ஒருவேளை பாமகவைச் சேர்த்தால், அப்போது விசிக தனது முடிவை அறிவிக்கும் என்று அவர் விளக்கினார்.
விசிக கொடுத்த அழுத்தத்தால் தான் பாமக திமுக கூட்டணிக்குள் வரவில்லை என்ற வாதத்தை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். தமிழக அரசியலில் திமுக - விசிக கூட்டணி வலுவாக உள்ள சூழலில், பாமக மற்றும் பிற கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் குறித்துத் திருமாவளவன் அளித்துள்ள இந்த விளக்கம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
