மகனுக்கு வழிவிட்டு, வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ் - பாமக தலைவர் பதவி வழக்கு முடித்து வைப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தாக்கல் செய்திருந்த மனுவை அவரே திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, அவ்வழக்கைச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
பாமகவின் தலைவராகத் தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி நிறுவனத் தலைவர் ராமதாஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பாமகவின் தலைவர் பதவி தொடர்பாகத் தங்களிடையே நிலவி வந்த உட்கட்சிப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தான் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக ராமதாஸ் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்தார். ராமதாஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம், பாமக தலைவர் பதவி தொடர்பான இந்த வழக்கை முழுமையாக முடித்து வைப்பதாக அறிவித்தது.
இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகத் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், கட்சிக்குள் நிலவி வந்த சட்டப் போராட்டமும் சுமுக முடிவுக்கு வந்துள்ளது.
