பல ஆண்டுகால நிலப்பிரச்சினைக்கு தீர்வு! ராமநாதபுரம் கலெக்டருக்கு சீர்வரிசை கொடுத்த 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டருக்கு 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடி பகுதியில் நீண்ட காலமாக அளவீடு செய்யப்படாமல் இருந்த நிலம் தொடர்பாக, தனியார் அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தி, நிலத்தை முறையாக அளவீடு செய்து பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, கீழக்கரை தாசில்தார் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று நிலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் நிலம் அளவீடு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களை தட்டுகளில் சீர்வரிசையாக எடுத்து வந்து மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள் அன்புடன் வழங்கிய சீர்வரிசை பொருட்களை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.மேலும், பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்பட்டு, உரிய தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என கலெக்டர் தெரிவித்தார்.
