ராஷ்டிரபதி பவனில் ‘ராமாயணா’ திரைப்படத்தைத் திரையிட திட்டம் - படக்குழுவினர் பிரம்மாண்ட ஏற்பாடு!
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி உலகளவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சியைத் தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் திரையிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிக்க காவியமான ‘ராமாயணா’ கதையை மையமாக வைத்துப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு நாளான நவம்பர் 5 அன்று, நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில் தில்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார அரங்கில் சிறப்புத் திரையிடலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இப்படத்தின் சிறப்புக் காட்சிகளை மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாச்சார மையத்திலும் திரையிடப் படக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் விளம்பரப் பணிகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
