ராமேசுவரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்! ₹10 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

 

 

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி விசைப்படகில் கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். எடின் புரோகர் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்த எபிஸ்டன், மத்தியா, ஜான்ஜெய்சன், ஸ்டீவன்சன், சுபார்டன், அபிஸ்டன், மோபிஸ், அந்தோணி பிரதீப், அந்தோணி புரூடஸ் ஆகிய 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களையும் அவர்களது படகையும் விடுவிக்க வேண்டும் என்றும், இந்தியா–இலங்கை இடையே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் இலங்கை கச்சத்தீவு படகு

வேலைநிறுத்தத்தால் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.மீன்பிடி நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் மீன் ஏற்றுமதி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.