ராமேஸ்வரம் : ராமநாத சுவாமி ஆலயத்திற்குள் அருவியாக கொட்டித் தீர்த்த மழைநீர்!

 
ராமேஸ்வரம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், நேற்று ராமேஸ்வரம் பகுதிகளில் லேசாக மழை பெய்தது. இந்த சிறிய மழைக்கே கோயில் வளாகத்தில் அருவி போல் மழைநீர் கொட்டியதால், பக்தர்கள் அவதி அடைந்தனர்.

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மூன்றாம் பிரகார தெற்கு பகுதியில் சமீபத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி உடைத்து, வெளிப்பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு முறையும், மழைபொழியும் போதும் இந்த பாதையில் மழை நீர் கோயிலுக்குள் அருவி போல் கொட்டி வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் நகர் பகுதியில் நேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இடைவெளியின்றி பெய்த மழை காரணமாக, தெருக்களில் உள்ள கால்வாய்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து சாலையில் கரைபுரண்டு ஓடியது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

பாதாளச்சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்படாததாலும், சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கால்வாயில் மழைநீர் செல்லாததாலும், சாலையில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் 2 மணி நேரத்தில் 2 மில்லிமீட்டர் அளவிற்கு பெய்ததால், மூன்றாம் பிரகார தெற்கு பகுதியில் அம்பாள் சன்னதி செல்லும் வழியெங்கும் மழைநீர் அருவி போல் கொட்டியது. இதனால் வழி எங்கும் மழை நீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீர்

இதையடுத்து கோயில் ஊழியர்கள் பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் ஏற்பட்டு வருவதால், இதற்கு நிரந்தர தீர்வாக மீண்டும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web